Thursday 30 April 2009

ப‌டித்த‌தில் பிடித்த‌து:

தேங்காய் மலபார் கூட்டு தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், காய்கறிகலவை - 2 கப், தனியா - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 3 (அ) 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடாயில் காய்கறிகளை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காயைப் போட்டு, தனியா, இஞ்சி, சீரகம், பச்சைமிளகாயைப் போட்டு அரைக்கவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

தேங்காய்-தக்காளி கூட்டு தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், மீடியமான தக்காளி - 4, பச்சைமிளகாய் - 4, வெங்காயம் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: தேங்காய் துருவல், வெங்காயம், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் தக்காளி, பச்சைமிளகாய் துண்டுகளைப் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். தனியாத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, தக்காளியை நன்கு மசிய விட வேண்டும். இது, சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


தேங்காய்ப் பால் - வெஜிடபிள் உருண்டை குழம்பு தேவையானவை: கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப், நறுக்கிய அவரை, வாழைக்காய், கத்திரிக்காய், பட்டாணி சேர்ந்த கலவை - 2 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

உருண்டைக்கு: பொடியாக நறுக்கிய வெந்தய கீரை (அ) முளைக்கீரை, கடலை மாவு, பாலக்கீரை - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கிரேவிக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 4, தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயகீரை, பாலக்கீரை, கடலைமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியற்றை லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி பொரித்துக் கொள்ளவும்.

தேங்காய்துருவல், கொத்தமல்லி, சோம்பு, பச்சைமிளகாய் ஆகியற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து இதனுடன் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு, தேங்காய்ப் பாலை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கும்போது விருப்பப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

தேங்காய் - எள் பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5 (அ) 8.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, எள், பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், கொப்பரை துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான இந்தத் தேங்காய் - எள் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.

தேங்காய் சட்னி ரைஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, பூண்டு - 3 பல், காய்ந்த மிளகாய் - 2, சாதம் - 2 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் புளி, மிளகாய், தேங்காய் துருவல், பூண்டு, கொத்தமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுதையும் போட்டு, 5 நிமிடம் கிளறவும். இந்தக் கலவையில் சாதத்தை போட்டுக் கலக்கி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

No comments: