Friday 31 October 2008

த‌க்காளி தொக்கு

தேவையான‌வை:

த‌க்காளி ப‌ழுத்த‌து 1 கிலோ
மிள‌காய் தூள் ‍ 75 - 100 கிராம்
ம‌ஞ்ச‌ள் தூள் 25 கிராம்
வெந்தய‌ப் பொடி ‍‍ 20 கிராம் (!?)
ந‌ல்லெண்ணை ‍ 50 கிராம் (ஹ்ம்ம் என்ன‌ செய்ய‌... எங்க‌ ஊருல‌ இது இல்ல‌, அதுக்காக‌ செய்யாம‌ விட‌ முடியுமா?, எதாவ‌து கார்ன் ஆயில் தான்)
க‌டுகு, வெந்த‌ய‌ம், உளுந்து ‍ தாளிக்க‌

செய்முறை:

1. த‌க்காளி ய‌ ந‌ல்லா ந‌றுக்கி (க‌ட் ப‌ண்ணி) வைத்து கொள்ள‌வும்
2. எண்ணை ய‌ காய‌ வைத்து, க‌டுகு, உளுந்து போட்டு தாளித்து, வெந்தய‌ம் போட்டு சிவ‌க்க‌ வ‌றுத்து, த‌க்காளிய‌ போட்டு வ‌த‌க்க‌வும். ‍ - 10 நிமிட‌மாவ‌து
3. ம‌ஞ்ச‌ள் பொடி, மிள‌காய், உப்பு, போட்டு, ம‌றுப‌டியும் வ‌த‌க்க‌வும் - 10 நிமிட‌மாவ‌து
4. த‌ண்ணீர் வ‌ற்றி, எண்ணை பிரிந்து வரும் போது, வெந்த‌ய‌ பொடி போட்டு கிள‌றி இற‌க்க‌வும் :)

த‌க்காளி தொக்கு த‌யார்.

Friday 22 August 2008

ஸ்ரீஜெயந்தி ...

பொட்டுக்கடலை சீடை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், தேங்காய்துருவல், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசி மாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், தேங்காய் துருவல், எள்ளு, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறு சீடைகளாக உருட்டி வைக்கவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாவை வறுப்பதால் சீடை வெடிக்காமல் இருக்கும்.

காரத்தட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்த மாவு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5, நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுக்கவும். பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வெள்ளைத் துணியில் மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு கரகரப்பாகப் பொரித்தெடுக்கவும்.
விருப்பப்பட்டால் வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காசி அல்வா
தேவையானவை: துருவிய வெள்ளைப்பூசணி - 4 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி துண்டுகள் - சிறிது.
செய்முறை: வெள்ளைப்பூசணி துருவலை ஒரு துணியில் நன்றாக மூட்டை கட்டி, நீரை கெட்டியாகப் பிழிந்து வடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் விட்டு, பூசணி துருவலைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும் பக்குவத்தில் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

மனோகரம்
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு - 4 கப், வறுத்துப் பொடித்த உளுத்தமாவு - முக்கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்குகளாகப் பொரித்தெடுக்கவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் வெல்லத்தைப் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கொதித்து கரைந்ததும் அதில் உள்ள மண்ணை வடிகட்டி மீண்டும் கடாயில் வைத்து கெட்டிப் பாகாகக் காய்ச்சவும் (ஒரு ஸ்பூனில் எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த முத்தை எடுத்துத் தட்டில் போட்டால் 'டங்' என்று சத்தம் கேட்கும். இதுவே சரியான பதம்). பிறகு அடுப்பை அணைத்து விட்டு, பொரித்த முறுக்குகளை போட்டு கலந்து வைக்கவும்.

thanks to Aval Vikatan

Thursday 10 July 2008

கறிவகைகள்/பச்சடி வகைகள்:

பருப்புசிலி:

எங்க பாட்டி பருப்புசிலி செய்றச்ச எண்ணை விடுறத பாத்தா, Dietitian கண்ணுல இருந்து ரத்தமே வரும்... ஆனா சில விஷயத்துக்கு -லாம் நாக்கே முடிவு எடுக்கும்..

ஆனா பருப்புசிலி இந்த வழில செஞ்சி பாரு னு எனக்கு சொன்னாங்க... 2 நல்ல விஷயம் இருக்கு இதுல..

1. எண்ணை குறைவு.
2. நேரம் சேமிப்பு

பருப்பு இட்லி க்கு:
துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 5-6 வரை (உங்க வயித்தோட சக்திய பொருத்து)

செய்முறை:
பருப்புகள் இரண்டையும் ஒரு இரண்டு-மூன்று மணி நேரம் ஊறவைத்து, அரைக்கும் பொழுது, 1 ஸ்பூன் பெருங்காயம், கொஞ்சமா உப்பு சேத்து கட்டியான பதத்துக்கு அரைத்து எடுத்துக்கோங்க. (வ்டைக்கு அரைப்போம் ல.. அதே பதம் தான்!),

இத இட்லி தட்டு ல ஊத்தி இட்லியா எடுத்து வச்சிக்கோங்க (ஃப்ரீஸர் ல ஒரு Ziplock கவர் ல போட்டு வச்சிக்கலாம்).

வேணும் போது, ஒரு 1/2 மணிக்கு முன்னாடி வெளில எடுத்து உதிர்த்து கொள்ளலாம். (மிக்ஸில ஒரு சுத்து விட்டாலும் ஆச்சு, இந்த இட்லிய வச்சே, பருப்பு உருண்டை குழம்பும் செய்வேன், நான் ரொம்ப சோம்பேறி தெரியுமோ?, பருப்பு உருண்டை குழம்பு கதைய அப்புறம் பாக்கலாம்)

இப்போ எந்த பருப்பு உசிலினாலும் நாம செய்யலாம் ல?? உதாரணத்துக்கு:

பீன்ஸ் பருப்புசிலி:
1/2 KG பீன்ஸ்
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் உளுந்து பருப்பு
கடுகு, எண்ணை, கறிவேப்பிலை - தாளிக்க
பருப்பு இட்லி - 3 - 4 வரை (நீங்க பெரிய இட்லி யா வாத்து இருந்தா.. நான் எப்படி அளவு சொல்றது ல?, நான் mini இட்லி தட்டுல செஞ்சி வைக்குறேன், பாக்கவும் நல்லா இருக்கும் ல)

செய்முறை:
முதலில் கொஞ்சமா தண்ணி விட்டு பீன்ஸ உப்பு போட்டு வேக விடுங்க.கடாயில் எண்ணை விட்டு, காய்ந்ததும், அதில் கடுகு, பருப்பு வகைகளை போட்டு, கறிவேப்பிலை பொட்டு தாளித்ததும், பருப்பு இட்லிகளை உதிர்த்து போட்டு வதக்கவும், கிளறி கொண்டே இருக்கணும் (இல்லனா அடி பிடித்து, என் நிறத்துல தான் உங்களுக்கு பருப்புசிலி வரும்), நல்லா பொன் நிறமாகும் பொழுது, அதில் வேக வைத்த பீன்ஸ போட்டு துளி உப்பு போட்டு, கிளறி இறக்கணும்.

பீன்ஸ் பருப்புசிலி தயார்.

****



கத்திரிக்காய் கொத்சு:

பெரிய அளவு கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம், கடுகு, எண்ணை - தாளிக்க
பச்சை மிளகாய் - 3

கத்திரிக்காயை சுட்டு (oven இருந்தா - PRE HEAT - 180-230 DEGREE ல 10 Mins, எண்ணை தடவி 10-15 mins) தோலை உறித்து பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து, புளி ஜலத்தை விட்டு கொதித்ததும், சுட்டு பிசைந்த கத்திரிக்காயயும் போட்டு கொதித்தும் கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும் :)



தக்காளி - தேங்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - கொஞ்சம்
உப்பு
தாளிக்க - எண்ணை

செய்முறை:

இஞ்சி, மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயோடு உப்பு சேர்த்து தயிருடன் கலந்து, தாளித்து (கடுகு, உளுந்து போட்டு தான்), கொத்தம்ல்லி தழையுடன் பரிமாறவும் (வேண்டுமானால் - ஃப்ரிட்ஜில் வைத்து)

கத்தரிக்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் - 1 கப் (புளிக்காதது)
சின்னதா கத்திரிக்காய் - 4-5
தேங்காய் துருவல் - 2-3 ஸ்பூண்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2
உப்பு
தாளிக்க - எண்ணை

செய்முறை:

கத்தரிக்காயை மெல்லியதாக நறுக்கி, பூண்டை நசுக்கி - இரண்டையும் எண்ணையில் வதக்கி ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு எண்ணையை எடுத்து விடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும். தயிருடன் இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து தாளித்து பரிமாறவும்.

பொடி வகைகள்:

இப்போ பொடி வகைகள பாப்போம், சரியா?

குழம்பு பொடி:
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 1/2 KG (குண்டு மிளகாயா இருந்தா சந்தோசம் தான்)
தனியா (கொத்தமல்லி விதை) - 1/2 KG
துவரம் பருப்பு - 1/4 KG
கடலை பருப்பு - 1/4 KG
மிளகு - 100 GM (ஜாஸ்தி னு தோண்றதோ??)
வெந்தயம் - 100 GM
மஞ்சள் (விரலி) - 1/4 KG (கிழங்கு மஞ்சள் இல்லயா?, கவலை வேணாமே, மஞ்ச பொடி 100 GM)

செய்முறை:
மேலே சொன்ன எல்லாவற்றையும் நல்லா வெயில காய வைத்து மிஷின் option இருந்தா மிஷினில குடுத்து, இல்லனா, மிக்ஸி ல அரைத்து பெரிய பாத்திரத்துல போட்டு பத்திர படுத்தி கொள்ளவும்.

ரசப் பொடி:
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 250 GM
தனியா (கொத்தமல்லி விதை) - 500 GM
துவரம் பருப்பு - 250gm
மிளகு - 150 GM
சீரகம் - 150 GM
மஞ்ச பொடி - 100 GM

செய்முறை:
மிஷின விட மிக்ஸி தான் பெஸ்ட்... ஏன்னா நல்லா அரைக்க கூடாது... தொர தொர னு அரைச்சா போதும். அரைத்து பெரிய ziplock கவர் ல போட்டு ஃப்ரிஜ் ல வச்சுடுங்க, அந்த அரோமா அரோமா னு சொல்றாங்கலே, அது போகாது.. காபி பொடி யயும் நாம ஃப்ரிஜ்ல வைக்குறது அதுக்குதானே ல?? சே... எதோ குறிப்பு குடுக்க வந்தா திரும்ப பல்பு குடுக்குறீங்களே.

சீரகம் + மிளகு ரசப் பொடி க்கு:
துவரம் பருப்பு - 1/2 கப் னா
மிளகு - 1/4 கப்
சீரகம் - 1/4 கப்
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 1/4 கப்

எல்லாத்தயும் இலுப்ப சட்டி (அதாங்க கடாய்) ல போட்டு சுமார வறுத்து மிக்ஸில பொடி பண்ணிக்கோங்க. அம்புட்டுதான்.

சாம்பார் பொடி க்கு:

நான் தான் சொன்னேனே, சாம்பார் க்குனு ஒரு தனி பொடி இருந்தா சாம்பார் செய்வது சுலபம்.

துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
தனியா (கொத்தமல்லி விதை) - 1/2 கப்
மிளகு - 1/8 கப்
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 1/4 கப்
வெந்தயம் - 2-3 ஸ்பூன்.

எல்லாத்தயும் இலுப்ப சட்டி ல வறுத்து மிக்ஸில பொடி பண்ணி அதோட 4 ஸ்பூன் மஞ்ச பொடியும் சேர்த்து கலந்து வச்சிக்கோங்க.



ரசப்பொடி - 2 வகை:

துவரம் பருப்பு - 2 கப்
தனியா - 3 கப்
மிளகு - 3 ஸ்பூன்
சீரகம் - 4 ஸ்பூன்

இவை எல்லாவற்றையும் எண்ணை விடாமல் வருத்து "தொர தொர" வென அரைத்து மஞ்சள் பொடி - 6 ஸ்பூன், மிளகாய் பொடி - 12 ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்.

க‌த்திரிக்காய் (அ) பிற‌ கறி செய்ய‌ பொடி தூவி:

க‌ட‌லை ப‌ருப்பு 1 க‌ப்
பெருங்காய‌ம் சிறிது
மிள‌காய் வ‌ற்ற‌ல் 10
த‌னியா 1/2 க‌ப்
மிள‌கு 10
தேங்காய் துருவ‌ல் ‍ 2 ஸ்பூன்

எல்லாவ‌ற்றையும் வெறும் வாண‌லியில் வ‌றுத்து உப்பு போட்டு அறைத்து கொள்ள‌வும்

ரசம்/குழம்பு வகைகள்:

முதலில் ரசம்:

என்னங்க ஆரம்பிக்கும் போதே ரசமா-னு சொல்றீங்களா? ரசம் தயார் செய்யும் முறை எளிது, ஜீரணமாவது எளிது.

எல்லாரும் சொல்லுவாங்க.. "என்ன பெருசா சமையல்... ஒரு சாதத்த வச்சு ரசம் வச்சா போச்சு னு", ரசம் அவ்வளவு ஈசி இல்லீங்க... நிறைய பேர் சொல்ற பொதுவான ப்ரச்சனை/குறை... "ரசம் நல்லாதான் வருது/இருக்கு, வெறும்னே சாப்பிட்டா/குடிச்சா நல்லா இருக்கு... ஆனா சாதத்துக்கு... புளி தண்ணி மாதிரி இருக்கு" னு, அது ஏன் அந்த குறை? நிவர்த்தி செய்வோமே!!

பாட்டி முறை ல ரசம் செய்யாலாம் வாங்க:

பருப்பு ரசம்:

(2 பேரு அளவுக்கே எழுதுறேன், அளவுள எதாவது குறை இருந்தா.. எங்க பாட்டிய குறை சொல்லாதீங்க, சரியா?)

தேவையான பொருட்கள்:

புளி: 1 எலுமிச்சை அளவு (அது சரி... அது என்னங்க அளவு??, lemon பெருசாஆ கூட தான் கிடைக்கும் னு லாம் தர்க்கம் பண்ண கூடாது சரியா)
பருப்பு தண்ணி - 2 கப் (அது தாங்க.. சாம்பார் க்கு பருப்பு வைக்கும் போது நிறைய தண்ணி வச்சிட்டு.. மிச்சத்த கீழே கொட்டுவோமே... அது !!)
உப்பு - (இதுக்குல்லாம் அளவு சொல்லனுமா??... கண் அளவு, கை அளவு தான்)
தக்காளி - 1 பெரிய size (நாட்டு தக்காளியா இருந்தா இன்னும் ருசி)
கொத்தமல்லி, கறிவேப்பிலை லாம் சொல்லணுமா??

செய்முறை:

புளியை கரைத்து, புளி தண்ணி ஒரு 2 தம்ளர் வரமாதிரி எடுத்துக்கோங்க, அதுல தக்காளியை 2 அல்லது 4 ஆக வெட்டி போடுங்க (அய்யோ... கரைக்க வேணாமே, வெட்டுங்க போதும்), அதுலயே ரசபொடி 3-4 spoon (ரச பொடி எப்படி செய்யறதுனு முழிக்காதீங்க, அப்புறம் அதயும் கத்துக்கலாம், சரியா), உப்பு, கொஞ்சமா மஞ்ச பொடி போட்டு, அடுப்புல ஏத்துங்க..

கொதிக்கட்டும்.. கொதிக்கட்டும்.. நல்லா கொதிக்கட்டும்.. 2 தம்ளர் தண்ணி 1 தம்ளராகட்டுமே... தக்காளி-நீங்க கரைச்சா எப்படி இருக்குமோ... அப்படி ஆகட்டும்... சரியா??

இப்போ, அடுப்ப sim ல வைங்க, பருப்பு தண்ணி ய விடுங்க, கொத்தமல்லி தழை கொஞ்சம் போட்டு, இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்க (ரொம்ப நேரம் வேணாம், ஏன்னா பருப்பு தண்ணி ஏற்கனவே கொதிச்சது தானே ல??), அடுப்பு ல இருந்து இறக்குங்க..

ஒரு சின்ன பாத்திரம் (கடாய்) எடுத்து ஒரு 2 spoon தேங்காய் எண்ணை விட்டு (இல்லனா நெய்), கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிங்க, தாளிச்சத ரசத்து மேல (நாம ஏற்கனவே செஞ்சாச்சு தெரியாதா??) கொட்டுங்க..

அவ்வளவு தான், ரசம் ரெடி.


அடுத்ததா... சாம்பார் க்கு வருவோம்... என்னங்க ரசம், சாம்பார் னு ... ஒரு ஸ்வீட், ஒரு கார பஜ்ஜி அப்படினு போலாமே னு நீங்க சொல்றது தெரியுது... முதல தேவைகள பூர்த்தி செஞ்சிக்கலாம், அப்புறமா அடுத்த நிலைக்கு போகலாம், என்ன சொல்றீங்க.

சாம்பார நான் ரெண்டு வகையா வேறு படுத்துவேன் என்னோட வசதிக்காக, "பருப்பு குழம்பு", "சாம்பார்" னு... வெறும்னே பொடி போட்டு பண்றத பருப்பு குழம்பு னு சொல்லுவேன், அரச்சு-விட்டோ இல்லனா, அதுக்குனு தனியா வச்சு இருக்குற பொடி போட்டு பண்றத சாம்பார் னு சொல்லுவேன்.

அரச்சுவிட்ட சாம்பார்:

தேவையானவை:
வேக வைத்த பருப்பு - 1 கப் (போதாதா??, 2 பேரு அளவு தான் சரியா)
புளி - 1 எலுமிச்சை பழம் (சின்ன அளவு)
குழம்பு பொடி - 2 ஸ்பூன் (இந்த பொடி எப்படி செய்றதயும் பாக்கலாம்)
காய் வகைகள் - சரியான காய் னு பாத்தா - சுரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி.
ஆனா எனக்கு என்ன கைல கிடைக்குறதோ அது தான், பீன்ஸ், கேரட், உருளை, குடை மிளகாய், எது வேணுமோ.

அரைக்க:
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - கொத்தமல்லி விதை/வரை - 1 1/2 ஸ்பூன்
மிளகு - 1-1.5 ஸ்பூன்
மிளகாய் வத்தல் (சிவப்பு மிளகாய்) - 5
தேங்காய் துருவல் - 3-4 ஸ்பூன்

செய்முறை:
பருப்பை கொஞ்சமா மஞ்ச பொடி போட்டு குழைய வேக வச்சுங்க (நான் அதுலய அரை தக்காளி போடுவேங்கறது வேற விஷயம்)

அரைக்க கொடுத்து இருக்குற எல்லாத்தயும் ஒன்றன் பின் ஒன்றா கொஞ்சம் எண்ணை விட்டு வருத்து, தேங்கா துருவல (வருக்க வேண்டாம், ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தா போரும்) - இத மிக்ஸில போட்டு கொஞ்சம் பெருங்காயம் பொடி போட்டு நல்லா அரைச்சுக்கோங்க.

புளி தண்ணிலயே காய்களை போட்டு (வதக்கி போடணும் னு இல்ல, அப்படியே போட்டாலும் பரவாயில்ல) நல்லா கொதிக்க விடுங்க பச்ச வாசண போற வரை. அப்புறம், அரைச்சு வச்சு இருக்குறதயும் போட்டு இன்னும் ஒரு 10 நிமிஷம் கொதிக்கவிடுங்க. அப்புறம் பருப்ப கரைச்சு (சும்மா கரண்டியால மசிச்சு) இதுல விடுங்க. கொத்தமல்லி தழை அது மேலயே போட்டுட்டு இறக்கி வச்சுடலாம். (ரொம்ப தண்ணி யா ஓடுது னு ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா வா இருந்தா கொஞ்சமா அரிசி மாவு கரைத்து விடலாம்)

அப்புறம் ஒரு சின்ன கடாயில கொஞ்சமா எண்ணை விட்டு, பெருங்காயம், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி சாம்பாரில (ஹலோ நம்புங்க, சாம்பார் செஞ்சாச்சு, எப்பயுமே நம்பாம இருந்தா எப்படி?)கொட்டிடுங்க.. அம்புட்டுதானுங்கோ!!!

****

அடுத்து மோர் குழம்பு:

தேவையானவை:
கெட்டியான புளிப்பு தயிர் - 1 கப் பூசணிக்காய்/சுரைக்காய்/சேப்பக்கிழங்கு/வெண்டைக்காய் - கட் பண்ணி 1 கப்.
மஞ்ச பொடி - 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா 1 - 1.5 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன் (நான் போட மாட்டேன், கசக்கும் னு ஒரு ஃபீலிங்கு)தேங்கா - துருவினது 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 (அளவு -size பாத்து குறைச்சிக்கலாம்)

செய்முறை:
பருப்புகள் இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைங்க.தயிர நல்லா கட்டியா கரைச்சுக்கோங்க, அதுலயே மஞ்ச பொடி, உப்பு போட்டுடலாம். ஊறின பருப்புகளோட, தனியா, வெந்தயம், மிளகாய, தேங்காய் துருவல் எல்லாத்தயும் போட்டு அரைச்சு தயிரோடயே கலந்துடலாம்.எந்த காய் போடுறதா இருந்தாலும், அத தனியா கொஞ்சம் வேக வச்சு (உப்பு போட்டு தான்) அதயும் இந்த தயிரோடயே கலந்துடலாம் சரியா? இத அப்படியே அடுப்பு ல ஏத்தி கொதிக்க விடுங்க, அப்பப்போ கிளறிட்டே இருக்கணும், பால் பொங்குர மாதிரி வரச்சே இறக்கிடலாம்.

இப்போ ஒரு சின்ன கடாய் ல, தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிச்சு மோர் குழம்போட தலைல கொட்டுங்க. அவ்வுளவு தான்.

பின்குறிப்பு:
1. நான் வடை கூட போடுவேன் :), அந்த வடை ஊறின அப்புறம் சாப்பிட சண்டையே நடக்க்கும்
2. தயிர் புளிக்கவே மாட்டேன் னு அடம் பிடிக்குற ஏரியாவை சேர்ந்தவரா? அடுப்புல இருந்து இறக்கினதுக்கு அப்புறம், எலுமிச்சை சாறு 2-3 ஸ்பூன் மேல விடுங்க.

Friday 4 July 2008

வாசல்

எனது பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு - சமைப்பது மற்றும் அதை பகிர்ந்து உண்பது:

ஆரம்பிக்கும் முன், ஒரு குட்டி கதை - செவி வழி கதையே!

கர்ணன் - ஒரு பெரிய கொடைவள்ளல்னு எல்லாருக்கும் தெரியும் இல்லயா? அவர் இறந்தபின் சொர்க்கத்துக்கு போனார் (அதான் தெரியுமே!!), போனாரா.... (ஹ்ம்ம் கொட்டி கேக்கனும்..... சரியா?) அங்க எல்லாத்தயும் சுத்தி பாத்துட்டே வந்தாராம், எல்லாரும் சந்தோசமா இருக்குறத பாத்தாரு... கொஞ்ச நேரத்துல அவருக்கு பசிச்சதாம், கர்ணனுக்கு ஒரே ஆச்சர்யம் (இதுல என்னய்யா ஆச்சர்யம்னு கேக்குறீங்களா?... சொர்க்கத்துல பசிக்காதாம், அதான் ஆச்சர்யம்).

அப்போ அந்த பக்கமா வந்த நாரதர் கிட்ட கேட்டாரு நம்ம கர்ணன் (சிவாஜி இல்லீங்க.. நிஜ கர்ணர்ர், சரியா), அதுக்கு நாரதர் சொன்னாராம்... நீ எல்லா தர்மமும் செய்தாய்... ஆனால் அன்ன தானம் செய்யவில்லை.. அது தான் உனக்கு இந்த பசி னு சொன்னாராம்... அதுக்கு என்ன செய்ய னு கர்ணன் கேட்க.. ஒரு பருக்கை சாதத்தை அவரது ஆட்காட்டி விரலால் சாப்பிட சொன்னாராம் நாரதர்... கர்ணனும் அப்படியே செய்ய... என்ன ஆச்சர்யம்... பசி மறைந்தது...

இப்போ நம்ப கர்ணனுக்கு அடுத்த சந்தேகம்... அதுக்கும் நாரதரே பதில் சொன்னாராம்... கர்ணன் ஒரு முறை ஒரு வழிபோக்கனுக்கு தனது ஆட்காட்டி விரலால் உணவு பறிமாறும் சத்திரத்தை காட்டினார், அந்த புண்ணியமே காரணம் னு..

இதனால் சொல்ல வரும் கருத்து... ??

எண் ஜான் உடம்பிற்க்கு வயிறே ப்ரதானம் - அதை நிரப்ப... அப்பபோ சிறு சிறு குறிப்புகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

ஓம் நமோ நாராயணாய!!

அடியேன்

ஸ்ரீ.