Thursday, 10 July 2008

ரசம்/குழம்பு வகைகள்:

முதலில் ரசம்:

என்னங்க ஆரம்பிக்கும் போதே ரசமா-னு சொல்றீங்களா? ரசம் தயார் செய்யும் முறை எளிது, ஜீரணமாவது எளிது.

எல்லாரும் சொல்லுவாங்க.. "என்ன பெருசா சமையல்... ஒரு சாதத்த வச்சு ரசம் வச்சா போச்சு னு", ரசம் அவ்வளவு ஈசி இல்லீங்க... நிறைய பேர் சொல்ற பொதுவான ப்ரச்சனை/குறை... "ரசம் நல்லாதான் வருது/இருக்கு, வெறும்னே சாப்பிட்டா/குடிச்சா நல்லா இருக்கு... ஆனா சாதத்துக்கு... புளி தண்ணி மாதிரி இருக்கு" னு, அது ஏன் அந்த குறை? நிவர்த்தி செய்வோமே!!

பாட்டி முறை ல ரசம் செய்யாலாம் வாங்க:

பருப்பு ரசம்:

(2 பேரு அளவுக்கே எழுதுறேன், அளவுள எதாவது குறை இருந்தா.. எங்க பாட்டிய குறை சொல்லாதீங்க, சரியா?)

தேவையான பொருட்கள்:

புளி: 1 எலுமிச்சை அளவு (அது சரி... அது என்னங்க அளவு??, lemon பெருசாஆ கூட தான் கிடைக்கும் னு லாம் தர்க்கம் பண்ண கூடாது சரியா)
பருப்பு தண்ணி - 2 கப் (அது தாங்க.. சாம்பார் க்கு பருப்பு வைக்கும் போது நிறைய தண்ணி வச்சிட்டு.. மிச்சத்த கீழே கொட்டுவோமே... அது !!)
உப்பு - (இதுக்குல்லாம் அளவு சொல்லனுமா??... கண் அளவு, கை அளவு தான்)
தக்காளி - 1 பெரிய size (நாட்டு தக்காளியா இருந்தா இன்னும் ருசி)
கொத்தமல்லி, கறிவேப்பிலை லாம் சொல்லணுமா??

செய்முறை:

புளியை கரைத்து, புளி தண்ணி ஒரு 2 தம்ளர் வரமாதிரி எடுத்துக்கோங்க, அதுல தக்காளியை 2 அல்லது 4 ஆக வெட்டி போடுங்க (அய்யோ... கரைக்க வேணாமே, வெட்டுங்க போதும்), அதுலயே ரசபொடி 3-4 spoon (ரச பொடி எப்படி செய்யறதுனு முழிக்காதீங்க, அப்புறம் அதயும் கத்துக்கலாம், சரியா), உப்பு, கொஞ்சமா மஞ்ச பொடி போட்டு, அடுப்புல ஏத்துங்க..

கொதிக்கட்டும்.. கொதிக்கட்டும்.. நல்லா கொதிக்கட்டும்.. 2 தம்ளர் தண்ணி 1 தம்ளராகட்டுமே... தக்காளி-நீங்க கரைச்சா எப்படி இருக்குமோ... அப்படி ஆகட்டும்... சரியா??

இப்போ, அடுப்ப sim ல வைங்க, பருப்பு தண்ணி ய விடுங்க, கொத்தமல்லி தழை கொஞ்சம் போட்டு, இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்க (ரொம்ப நேரம் வேணாம், ஏன்னா பருப்பு தண்ணி ஏற்கனவே கொதிச்சது தானே ல??), அடுப்பு ல இருந்து இறக்குங்க..

ஒரு சின்ன பாத்திரம் (கடாய்) எடுத்து ஒரு 2 spoon தேங்காய் எண்ணை விட்டு (இல்லனா நெய்), கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிங்க, தாளிச்சத ரசத்து மேல (நாம ஏற்கனவே செஞ்சாச்சு தெரியாதா??) கொட்டுங்க..

அவ்வளவு தான், ரசம் ரெடி.


அடுத்ததா... சாம்பார் க்கு வருவோம்... என்னங்க ரசம், சாம்பார் னு ... ஒரு ஸ்வீட், ஒரு கார பஜ்ஜி அப்படினு போலாமே னு நீங்க சொல்றது தெரியுது... முதல தேவைகள பூர்த்தி செஞ்சிக்கலாம், அப்புறமா அடுத்த நிலைக்கு போகலாம், என்ன சொல்றீங்க.

சாம்பார நான் ரெண்டு வகையா வேறு படுத்துவேன் என்னோட வசதிக்காக, "பருப்பு குழம்பு", "சாம்பார்" னு... வெறும்னே பொடி போட்டு பண்றத பருப்பு குழம்பு னு சொல்லுவேன், அரச்சு-விட்டோ இல்லனா, அதுக்குனு தனியா வச்சு இருக்குற பொடி போட்டு பண்றத சாம்பார் னு சொல்லுவேன்.

அரச்சுவிட்ட சாம்பார்:

தேவையானவை:
வேக வைத்த பருப்பு - 1 கப் (போதாதா??, 2 பேரு அளவு தான் சரியா)
புளி - 1 எலுமிச்சை பழம் (சின்ன அளவு)
குழம்பு பொடி - 2 ஸ்பூன் (இந்த பொடி எப்படி செய்றதயும் பாக்கலாம்)
காய் வகைகள் - சரியான காய் னு பாத்தா - சுரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி.
ஆனா எனக்கு என்ன கைல கிடைக்குறதோ அது தான், பீன்ஸ், கேரட், உருளை, குடை மிளகாய், எது வேணுமோ.

அரைக்க:
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - கொத்தமல்லி விதை/வரை - 1 1/2 ஸ்பூன்
மிளகு - 1-1.5 ஸ்பூன்
மிளகாய் வத்தல் (சிவப்பு மிளகாய்) - 5
தேங்காய் துருவல் - 3-4 ஸ்பூன்

செய்முறை:
பருப்பை கொஞ்சமா மஞ்ச பொடி போட்டு குழைய வேக வச்சுங்க (நான் அதுலய அரை தக்காளி போடுவேங்கறது வேற விஷயம்)

அரைக்க கொடுத்து இருக்குற எல்லாத்தயும் ஒன்றன் பின் ஒன்றா கொஞ்சம் எண்ணை விட்டு வருத்து, தேங்கா துருவல (வருக்க வேண்டாம், ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தா போரும்) - இத மிக்ஸில போட்டு கொஞ்சம் பெருங்காயம் பொடி போட்டு நல்லா அரைச்சுக்கோங்க.

புளி தண்ணிலயே காய்களை போட்டு (வதக்கி போடணும் னு இல்ல, அப்படியே போட்டாலும் பரவாயில்ல) நல்லா கொதிக்க விடுங்க பச்ச வாசண போற வரை. அப்புறம், அரைச்சு வச்சு இருக்குறதயும் போட்டு இன்னும் ஒரு 10 நிமிஷம் கொதிக்கவிடுங்க. அப்புறம் பருப்ப கரைச்சு (சும்மா கரண்டியால மசிச்சு) இதுல விடுங்க. கொத்தமல்லி தழை அது மேலயே போட்டுட்டு இறக்கி வச்சுடலாம். (ரொம்ப தண்ணி யா ஓடுது னு ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா வா இருந்தா கொஞ்சமா அரிசி மாவு கரைத்து விடலாம்)

அப்புறம் ஒரு சின்ன கடாயில கொஞ்சமா எண்ணை விட்டு, பெருங்காயம், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி சாம்பாரில (ஹலோ நம்புங்க, சாம்பார் செஞ்சாச்சு, எப்பயுமே நம்பாம இருந்தா எப்படி?)கொட்டிடுங்க.. அம்புட்டுதானுங்கோ!!!

****

அடுத்து மோர் குழம்பு:

தேவையானவை:
கெட்டியான புளிப்பு தயிர் - 1 கப் பூசணிக்காய்/சுரைக்காய்/சேப்பக்கிழங்கு/வெண்டைக்காய் - கட் பண்ணி 1 கப்.
மஞ்ச பொடி - 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா 1 - 1.5 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன் (நான் போட மாட்டேன், கசக்கும் னு ஒரு ஃபீலிங்கு)தேங்கா - துருவினது 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 (அளவு -size பாத்து குறைச்சிக்கலாம்)

செய்முறை:
பருப்புகள் இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைங்க.தயிர நல்லா கட்டியா கரைச்சுக்கோங்க, அதுலயே மஞ்ச பொடி, உப்பு போட்டுடலாம். ஊறின பருப்புகளோட, தனியா, வெந்தயம், மிளகாய, தேங்காய் துருவல் எல்லாத்தயும் போட்டு அரைச்சு தயிரோடயே கலந்துடலாம்.எந்த காய் போடுறதா இருந்தாலும், அத தனியா கொஞ்சம் வேக வச்சு (உப்பு போட்டு தான்) அதயும் இந்த தயிரோடயே கலந்துடலாம் சரியா? இத அப்படியே அடுப்பு ல ஏத்தி கொதிக்க விடுங்க, அப்பப்போ கிளறிட்டே இருக்கணும், பால் பொங்குர மாதிரி வரச்சே இறக்கிடலாம்.

இப்போ ஒரு சின்ன கடாய் ல, தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிச்சு மோர் குழம்போட தலைல கொட்டுங்க. அவ்வுளவு தான்.

பின்குறிப்பு:
1. நான் வடை கூட போடுவேன் :), அந்த வடை ஊறின அப்புறம் சாப்பிட சண்டையே நடக்க்கும்
2. தயிர் புளிக்கவே மாட்டேன் னு அடம் பிடிக்குற ஏரியாவை சேர்ந்தவரா? அடுப்புல இருந்து இறக்கினதுக்கு அப்புறம், எலுமிச்சை சாறு 2-3 ஸ்பூன் மேல விடுங்க.

No comments: