Thursday 10 July 2008

கறிவகைகள்/பச்சடி வகைகள்:

பருப்புசிலி:

எங்க பாட்டி பருப்புசிலி செய்றச்ச எண்ணை விடுறத பாத்தா, Dietitian கண்ணுல இருந்து ரத்தமே வரும்... ஆனா சில விஷயத்துக்கு -லாம் நாக்கே முடிவு எடுக்கும்..

ஆனா பருப்புசிலி இந்த வழில செஞ்சி பாரு னு எனக்கு சொன்னாங்க... 2 நல்ல விஷயம் இருக்கு இதுல..

1. எண்ணை குறைவு.
2. நேரம் சேமிப்பு

பருப்பு இட்லி க்கு:
துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 5-6 வரை (உங்க வயித்தோட சக்திய பொருத்து)

செய்முறை:
பருப்புகள் இரண்டையும் ஒரு இரண்டு-மூன்று மணி நேரம் ஊறவைத்து, அரைக்கும் பொழுது, 1 ஸ்பூன் பெருங்காயம், கொஞ்சமா உப்பு சேத்து கட்டியான பதத்துக்கு அரைத்து எடுத்துக்கோங்க. (வ்டைக்கு அரைப்போம் ல.. அதே பதம் தான்!),

இத இட்லி தட்டு ல ஊத்தி இட்லியா எடுத்து வச்சிக்கோங்க (ஃப்ரீஸர் ல ஒரு Ziplock கவர் ல போட்டு வச்சிக்கலாம்).

வேணும் போது, ஒரு 1/2 மணிக்கு முன்னாடி வெளில எடுத்து உதிர்த்து கொள்ளலாம். (மிக்ஸில ஒரு சுத்து விட்டாலும் ஆச்சு, இந்த இட்லிய வச்சே, பருப்பு உருண்டை குழம்பும் செய்வேன், நான் ரொம்ப சோம்பேறி தெரியுமோ?, பருப்பு உருண்டை குழம்பு கதைய அப்புறம் பாக்கலாம்)

இப்போ எந்த பருப்பு உசிலினாலும் நாம செய்யலாம் ல?? உதாரணத்துக்கு:

பீன்ஸ் பருப்புசிலி:
1/2 KG பீன்ஸ்
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் உளுந்து பருப்பு
கடுகு, எண்ணை, கறிவேப்பிலை - தாளிக்க
பருப்பு இட்லி - 3 - 4 வரை (நீங்க பெரிய இட்லி யா வாத்து இருந்தா.. நான் எப்படி அளவு சொல்றது ல?, நான் mini இட்லி தட்டுல செஞ்சி வைக்குறேன், பாக்கவும் நல்லா இருக்கும் ல)

செய்முறை:
முதலில் கொஞ்சமா தண்ணி விட்டு பீன்ஸ உப்பு போட்டு வேக விடுங்க.கடாயில் எண்ணை விட்டு, காய்ந்ததும், அதில் கடுகு, பருப்பு வகைகளை போட்டு, கறிவேப்பிலை பொட்டு தாளித்ததும், பருப்பு இட்லிகளை உதிர்த்து போட்டு வதக்கவும், கிளறி கொண்டே இருக்கணும் (இல்லனா அடி பிடித்து, என் நிறத்துல தான் உங்களுக்கு பருப்புசிலி வரும்), நல்லா பொன் நிறமாகும் பொழுது, அதில் வேக வைத்த பீன்ஸ போட்டு துளி உப்பு போட்டு, கிளறி இறக்கணும்.

பீன்ஸ் பருப்புசிலி தயார்.

****



கத்திரிக்காய் கொத்சு:

பெரிய அளவு கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம், கடுகு, எண்ணை - தாளிக்க
பச்சை மிளகாய் - 3

கத்திரிக்காயை சுட்டு (oven இருந்தா - PRE HEAT - 180-230 DEGREE ல 10 Mins, எண்ணை தடவி 10-15 mins) தோலை உறித்து பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து, புளி ஜலத்தை விட்டு கொதித்ததும், சுட்டு பிசைந்த கத்திரிக்காயயும் போட்டு கொதித்தும் கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும் :)



தக்காளி - தேங்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - கொஞ்சம்
உப்பு
தாளிக்க - எண்ணை

செய்முறை:

இஞ்சி, மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயோடு உப்பு சேர்த்து தயிருடன் கலந்து, தாளித்து (கடுகு, உளுந்து போட்டு தான்), கொத்தம்ல்லி தழையுடன் பரிமாறவும் (வேண்டுமானால் - ஃப்ரிட்ஜில் வைத்து)

கத்தரிக்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் - 1 கப் (புளிக்காதது)
சின்னதா கத்திரிக்காய் - 4-5
தேங்காய் துருவல் - 2-3 ஸ்பூண்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2
உப்பு
தாளிக்க - எண்ணை

செய்முறை:

கத்தரிக்காயை மெல்லியதாக நறுக்கி, பூண்டை நசுக்கி - இரண்டையும் எண்ணையில் வதக்கி ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு எண்ணையை எடுத்து விடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும். தயிருடன் இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து தாளித்து பரிமாறவும்.

No comments: